BSNLEU தமிழ் மாநில உதவி தலைவரும், நமது மாவட்ட சங்கத்தின் முன்னோடியுமான, அருமை தோழர் S. தமிழ்மணி நாளை (30.06.2021) இலாக்கா பணி நிறைவு செய்கிறார். 1980 ல் தொலைபேசி இயக்குனராக, ஓசூரில் 19 வயதில் இலாக்கா வாழ்வை துவங்கிய தோழர் தமிழ்மணி, நீண்ட நெடிய 41 ஆண்டுகால சேவையை, 30.06.2021 அன்று நிறைவு செய்கிறார். இலாக்காவில் கொடுக்கப்பட்ட மாறுபட்ட சவாலான பணிகளை, இன்முகத்துடன் ஏற்று, திறமையான ஒரு ஊழியராக சேவை மனப்பாங்குடன், கடைசி நாள் வரை, வாடிக்கையாளர் சேவை மையத்தில், என்றுமே வாடிக்கையாளருடன் நேரடியாக தொடர்புடைய ஒரு ஊழியராக சிறப்பாக பணி புரிந்தவர் தோழர் தமிழ்மணி .
அதே போல் ஆரம்ப காலம் முதல் தொழிற்சங்க இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு அணைத்து விதமான இயக்கங்களிலும் முழுமையாக கலந்து கொண்டுவர். கிளை சங்க பொறுப்பு துவங்கி, மாவட்ட சங்கம், மாநில சங்க பொறுப்பு வரை பல பொறுப்புகளை திறம்பட கையாண்டவர். பல ஆண்டுகள் தள மட்ட கவுன்சில் செயலராக (LJCM Staff Side Secretary) செயல்பட்டவர். அதிகாரிகளிடத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளை அமைதியாக, ஆனால் உறுதியாக வாதாடுவதில் கைதேர்ந்தவர். இலாக்கா விதிகளில் ஆழமான புரிதலும், அனுபவ ரீதியாக, சிறப்பான தீர்வை எடுத்து கூறுவதிலும் திறன் படைத்தவர்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து, சேலம் மாவட்டம் வந்த நாள் முதல் நமது KG போஸ் அணியை கட்டமைப்பதற்கு, சித்தாந்த ரீதியாக கள பணியாற்றியவர். நமது இயக்கத்தை Class III பிரிவினர் மத்தியில் பிரபலம் அடைய செய்து, பெரும்பான்மையான தோழர்களை நம் அமைப்பில் கொண்டு வந்ததில் தோழரின் பங்கு மகத்தானது. அதே போல், நான்காம் பிரிவு ஊழியர்கள், காசுவல் மஸ்துர் தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என அனைவரையும் அரவனைத்து, இயக்கத்தில் இணைத்தது பெருமைக்குரிய விஷயம். அந்த காலத்தில், பல இளைய மஸ்துர் தோழர்களுக்கு இயக்கம் சம்மந்தமான விஷயங்களை விளக்கி, தொழிற்சங்க வகுப்பு எடுத்து, அதன் பலனாக இந்த இயக்கத்தின் மீது பற்றுதல் ஏற்பட்டு, இன்று பல தோழர்கள் BSNLEU / TNTCWU இயக்க முன்னோடிகளாக இருப்பது போற்றுதலுக்குரியது.
மொத்தத்தில், இளைய தோழர்களுக்கு புதிய பணிகளை கொடுத்து, இயக்க பணிகளில் பழக்கி விடுவதில் அவருக்கு நிகர் அவரே. அனைத்து பகுதி தோழர்களோடும், நல்லதொரு சுமுகமான உறவை பராமரிக்கக் கூடிய அற்புதமான தோழர். தொழிற்சங்க இயக்க பணிகளில், தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
பல போராட்டங்களை தலைமை ஏற்று திறம்பட வழி நடத்தி அதன் காரணமாக நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாகி, பழிவாங்கல்கள், தண்டனைகள் பெற்றவர். தொழிற் சங்க அரங்கில் பால பாடம் படித்து, மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றவர். சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படுகின்ற வர்கத்தின் பிரிதிநிதியாக, சக தோழனாக தோள் கொடுப்பவர்.
தோழரின் துணைவியார் தோழரின் இயக்க பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததை, இந்த நேரத்தில் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும். அவர் தம் பிள்ளைகளும் (ஒரு மகன், ஒரு மகள்) தோழருக்கு ஒத்துழைப்பு நல்கியது பாராட்டுக்குரியது. இலாக்கா பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வெளியில், அவருடைய பயணம் மேலும் சிறப்பாக அமைய, தோழர் ஏற்றுக்கொண்டுள்ள லட்சியங்களில் தொடர் வெற்றிகளை பெற, சேலம் மாவட்ட BSNLEU சார்பாக வாழ்த்தி, தோழர் தம் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய, நல் வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறோம்.