BSNL இயக்குனர் குழுவுடனான பேச்சு வார்த்தையில், 0% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக AUAB தெரிவித்தது. இதை தொடர்ந்து பல அறிவு ஜீவிகள் தங்களின் கணித திறமையை வெளிக்காட்ட துவங்கியுள்ளனர். 0% ஊதிய உடன்பாட்டால், ஊழியர்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களாக, ஊதிய மாற்றத்தில், ஊழியர்களுக்கு நல்லதொரு பலனை பெற்று தருவதற்கு, கடுமையான முயற்சிகளை AUAB மேற்கொண்டது. 03.12.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பையும் AUAB வெளியிட்டது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பு, மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்த திரு மனோஜ் சின்ஹா அவர்களை, AUABயுடன் பேச்சு வார்த்தை நடத்த நிர்பந்தித்தது. ஆனால் பேச்சு வார்த்தையில், 15% ஊதிய நிர்ணய பலனை, மத்திய தொலை தொடர்பு அமைச்சர் நிராகரித்து விட்டார்.
அதன் பின், 18.02.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை AUAB நடத்தியது. அந்த வேலை நிறுத்தத்திற்கு முன், மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா, 0% ஊதிய நிர்ணய பலனுடனான ஊதிய மாற்றத்திற்கு உறுதி அளித்தார். ஆனால், அவர் எழுத்து பூர்வமான உறுதி மொழியை வழங்க தயாராக இல்லாததால், BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும், மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருந்த போதும், ஊதிய மாற்ற பிரச்சனையை தீர்வு காண இயலவில்லை. AUABயின் கடுமையான முயற்சிகளுக்கு பின்னரும், ஊதிய மாற்ற பிரச்சனை, தீர்வு காண முடியவில்லை என்பதை நமது தோழர்கள் அனைவரும் புரிந்துக் கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக, நிர்வாகமும், அரசாங்கமும் ஊதிய மாற்ற பிரச்சனையை குழி தோண்டி புதைத்திருந்தன. இந்த சூழ்நிலையில், AUABயின் கடுமையான முயற்சிகளின் காரணமாகவே, CMD BSNL உடன் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. AUABயில் உள்ள அனைத்து சங்கங்களின் பொதுச்செயலர்களும், 0% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தினை ஏற்றுக் கொள்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இன்றும் BSNL ஒரு நிதி நெருக்கடியில் உள்ளது என்பதையும், தற்போதைய சூழ்நிலையில், இதைவிட நல்லதொரு உடன்பாட்டிற்கு சாத்தியமில்லை என்பதை நியாய உணர்வு உள்ள அனைத்து ஊழியர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்