அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில், BSNLEU சங்கத்தின் 10வது அகில இந்திய மாநாடு, 02.04.2022 முதல் 04.04.2022 வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் அனிமேஷ் மித்ரா, அகில இந்திய தலைவர் தலைமை தாங்கினார். நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து, சார்பாளர்கள், பார்வையாளர்கள், திரளாக வந்திருந்தனர். தமிழகத்தில் இருந்து சுமார் 60 தோழர்களும், சேலம் மாவட்டத்திலிருந்து 6 தோழர்களும் மாநாட்டிற்கு சென்றிருந்தோம்.
துவக்க நிகழ்வாக, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, தேசிய கொடி ஏற்றப்பட்டு, பின் சங்க கொடி ஏற்றப்பட்டது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின், CITU அகில இந்திய தலைவர் தோழர் K. ஹேமலதா, மாநாட்டை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். Trade Union International, சர்வேதச தொழிற்சங்க அமைப்பின் தலைவர், தோழர் ஏர்டிம் இலாமி, துருக்கி நாட்டிலிருந்து வந்திருந்து மாநாட்டை வாழ்த்தினார்.
பொது மாநாட்டில், இந்திய உழைப்பாளி வர்கத்தின் மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் V.A.N. நம்பூதிரி, NFTE, SNEA, AIGETOA, AIBSNLEA, AIBDPA, BSNLMS, SNATTA, BSNLCCWF, JCTU சங்கங்களின் அகில இந்திய தலைவர்கள், அசாம் CGMT., உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
02.04.2022 மதிய உணவு இடைவேளைக்கு பின் துவங்கிய சார்பாளர் மாநாட்டில், 91 தோழர்கள் பங்குபெற்று 04.04.2022 அன்று மதியம் 12.30 மணி அளவில் விவாதம் நிறைவு பெற்றது.
தமிழ் மாநிலம் சார்பாக தோழர்கள் A. பாபு ராதா கிருஷ்ணன், மாநில தலைவர், P. ராஜு, மாநில செயலர், S. ஹரிஹரன், மாநில உதவி செயலர், M. செந்தில்குமார், கிளை செயலர், தேனி ஆகிய நான்கு தோழர்கள் விவாதத்தில் பங்குபெற்றனர்.
விவாதத்திற்கு பதிலளித்து பொது செயலர் தொகுப்புரை வழங்கியபின், செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சங்க அமைப்பு விதியில் மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வும் ஏகமனதாக நடத்தி முடிக்கப்பட்டது.
அதன்படி, தோழர்கள் அனிமேஷ் மித்ரா (மேற்கு வங்காளம்) தலைவராகவும், தோழர் P. அபிமன்யு (தமிழகம்) பொது செயலராகவும், தோழர் ஜான் வர்கீஸ் (மராட்டியம்) துணை பொது செயலராகவும், தோழர் இர்பான் பாஷா (கர்நாடகா) பொருளாராகவும், தமிழக தோழர் S. செல்லப்பா, உதவி பொது செயலராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
04.04.2022 மாலை சுமார் 5 மணி அளவில், மாநாடு நிறைவு பெற்றது. பிரமாண்டமான கூட்ட அரங்கம், சுவையான உணவு, வசதியான தங்குமிடம், விளம்பரங்கள், கொடிகள், தட்டிகள் என சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த அசாம் வரவேற்பு குழு தோழர்களை சேலம் மாவட்ட சங்க மனதார பாராட்டுகிறது.
BSNL நிறுவனத்தையும், BSNLEU சங்கத்தையும் வலுப்படுத்தும் விதத்தில் ஆக்க பூர்வமான கருத்துக்கள் விவாதத்தில் வந்தது மாநாட்டின் சிறப்பம்சம். ஒன்றிய அரசின் பொது துறை விரோத கொள்கைகளால், நமது நிறுவனமும், நாமும் சந்திக்கும் அவலங்களை புரிந்து நிகழ்கால எதார்த்தங்களை சார்பாளர்கள் கணக்கில் எடுத்து கொண்டு விவாதத்தை முன்வைத்தது, நமது சங்கத்தின், தோழர்களின், முதிர்ச்சியை, பக்குவத்தை வெளிப்படுத்தியது. மூன்று நாட்களும் தோழர்கள் பொறுமையாக, வெளியில் எங்கும் செல்லாமல், முழுமையாக மாநாட்டில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.