நாள்: 28.07.2022, வியாழக்கிழமை, காலை 11 மணி அளவில்
இடம் :சேலம் GM அலுவலகம்
தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் BSNLன் 14917 மொபைல் டவர்களை தனியாருக்கு தாரை வார்த்திட, அரசாங்கமும், BSNL நிர்வாகமும், வெகு வேகமாக செயல்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் முடிவை அமலாக்க, CMD BSNL, வேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
BSNLன் மொபைல் டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் 40,000 கோடி ரூபாய்களை திரட்ட போவதாக, மத்திய அரசாங்கம், தனது நிதிநிலை அறிக்கையில் மிக தெளிவாக கூறியுள்ளது. தேசிய பணமாக்கல் திட்டத்தின் அடிப்படையில் BSNLன் டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்த்த பின்னர், தனது சொந்த டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும் பயன்படுத்துவதற்கு, தனியாருக்கு, BSNL நிறுவனம் வாடகை செலுத்த வேண்டி இருக்கும். இது BSNL நிறுவனத்தை அழித்து விடும் என்று சொல்ல தேவையில்லை.
தனியார் நிறுவனங்கள் எல்லாம் 5G சேவையை துவங்க தயாராகி வரும் சூழ்நிலையில், BSNL, 4G சேவையை துவங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. TCS நிறுவனம், தனது PROOF OF CONCEPTஐ இன்னமும் முழுமை படுத்தவில்லை. இதனை நிறைவேற்ற, முதலில் கொடுக்கப்பட்ட கெடு, 2021, நவம்பர் 30. இந்தக் கெடு, பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை TCS நிறுவனத்தால், PROOF OF CONCEPTஐ நிறைவேற்ற முடியவில்லை. BSNL நிறுவனத்திற்கு 4G கருவிகளை வழங்குவதற்கான தொழில்நுட்பம் தன்னிடம் உள்ளது என TCS நிறுவனத்தால் நிரூபிக்க முடியவில்லை என்பது தான், இதன் பொருள். TCS நிறுவனம், BSNLக்கு 1லட்சம் டவர்களை வழங்க ஒத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்க விஷயம். ஆனால், எப்போது, எப்படி TCS நிறுவனம் வழங்கும் என்பது யாருக்கும் தெரியாது. 4G சேவையை துவங்காததனால் BSNL நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை இழக்க துவங்கியுள்ளது. 2022, மே மாதம் மட்டும், 5.3 லட்சம் இணைப்புகளை, BSNL நிறுவனம் இழந்துள்ளது.
BSNLன் புத்தாக்க திட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. BSNLன் பொருளாதர நிலைமை மோசமடைந்து வருகின்றது. VRSக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக திரும்பிக் கொண்டுள்ளது. எனவே, BSNLன் டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், BSNLன் 4G சேவையினை துவங்க, அரசாங்கமும், BSNL நிர்வாகமும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், 28.07.2022 அன்று மதிய உணவு இடைவேளையில், கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திட, AUAB அறைகூவல் விடுத்துள்ளது.
மத்திய AUAB அறைகூவல்படி, நமது சேலம் மாவட்டத்தில் 28.07.2022 அன்று சேலம் GM அலுவலகத்தில், காலை 11 மணி அளவில், கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்கள் பெருந்திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டு, இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.