தோழமைக்குரிய உறவுகளுக்கு, வணக்கம்!.
18.02.2025 அன்று சென்னை RGMTTC பயிற்சி மைய, கூட்ட அரங்கத்தில், BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் 10வது மாநில மாநாடு, சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன், மாநில தலைவர், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, தேசிய கொடியை தோழர் S. செல்லப்பா, AGS ஏற்றி வைக்க, BSNLEU சங்க கொடியை தோழர் P. ராஜு மாநில செயலர், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். சேலம் மாவட்ட மூத்த தோழர் P. செல்வம், விண்ணை பிளக்கும் கோஷங்களை எழுப்பியது, சிறப்பாக இருந்தது, சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது. தியாகிகள் ஸ்துபிக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாட்டு அரங்கில் தோழியர் G. உமாராணி மாநில அமைப்பு செயலாளர் அஞ்சலியுறை வழங்கினார். தோழர் P. ராஜு, மாநிலச் செயலர் அனைவரையும் வரவேற்றார்.
BSNLEU அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் P. அபிமன்யு, மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவர் தம் உரையில் மூன்றாவது ஊதிய மாற்றம், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஊதிய மாற்ற கமிட்டி கூட்டங்கள், BSNL நிறுவனத்தின் தற்போதைய நிலை, லாப நட்ட கணக்கு விவரங்கள், இரண்டாவது VRS, FTTH சேவை குறைபாடுகள், 4G / 5G சேவைகள் வழங்குவதில் நீடிக்கும் சிக்கல்கள், ஊழியர் தரப்பு கோரிக்கைகள், போக்குவரத்துப்படி, NEPP திட்டத்தில், நாம் கோரியுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். நமது உதவி பொது செயலர் தோழர் S. செல்லப்பா எதிர்வரும் 11வது அகில இந்திய மாநாடு, அது சம்பந்தமான ஏற்பாடுகளை விளக்கி விளக்கவுரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, தோழமை சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். முதலில், NFTE மாநிலச் செயலாளர் தோழர் K. நடராஜன், அவரைத் தொடர்ந்து, SEWABSNL முதன்மை ஆலோசகர் தோழர் . P. N. பெருமாள், SNEA மாநிலச் செயலாளர் தோழர் வளனரசு, AIGETOA மாநில செயலர் தோழர் ஆல்பர்ட் சிங், SEWA BSNL மாநில செயலர் தோழியர் D. பரிமளா செல்வி, AIBSNLEA மாநிலச் செயலாளர் தோழர் S. பிரபாகர், AIBDPA மாநில செயலர் தோழர் R. ராஜசேகர், சென்னை தொலைபேசி BSNLEU மாநில செயலர் தோழர் M. ஸ்ரீதர் சுப்ரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கிய பின், உணவு இடைவேளைக்கு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் மாநாடு துவங்கியவுடன், தோழர் M. சையத் இத்ரீஸ், TNTCWU மாநிலச் செயலாளர் மற்றும் தோழியர் S. அழகு நாச்சியார் கன்வினர், BSNLWWCC ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர், பொருளாய்வு குழு தொடங்கியது. மாநில செயலர் 3 ஆண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். 19 தோழர்கள் சார்பாளர் விவாதத்தில் பங்கு பெற்றனர். நமது சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், DP மற்றும் தோழர் M. சண்முகம், ADS விவாதத்தில் பங்கு பெற்றனர். நமது மாவட்ட கோரிக்கைகளை இருவரும் எழுப்பினர். விவாதத்திற்கு பதில் அளித்து மாநில செயலர் தொகுப்புரை வழங்கிய பின், செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு கணக்கு இரண்டும் ஏக மனதாக ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகுதி ஆய்வு குழு அறிக்கை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏக மனதாக ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் S. மகேஸ்வரன் (கோவை) மாநிலத் தலைவராகவும், தோழர் B. மாரிமுத்து (வேலூர்) மாநில செயலாளராகவும், தோழர் V. செந்தில்குமார் (மதுரை) மாநில பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. நமது மாவட்டத்தில் இருந்து, தோழர் S. ஹரிஹரன் மீண்டும் மாநில உதவி செயலராகவும், தோழர் M. சண்முகம் புதிய மாநில அமைப்பு செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில சங்க பொறுப்பில் இருந்து விடுபடும், மாநில செயலர் தோழர் P. ராஜு உள்ளிட்ட மாநில சங்க நிர்வாகிகள் கௌரவப்படுத்தப்பட்டனர். தோழர் C. சசிகுமரன், CVP நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். தகுதி ஆய்வு குழு அறிக்கையின் படி சுமார் 200 தோழர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அதில் முதன்மையாக சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, 20 சார்பாளர் தோழர்கள் பங்கு பெற்றது சிறப்பானது, மகிழ்ச்சியானது. சேலம் மாவட்ட சார்பாள தோழர்களுக்கு, மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றிகள். வரவேற்பு குழு அமைக்காவிட்டாலும், சென்னை பகுதி தோழர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்ட விதத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சார்பாளர் கட்டணம் வசூலிக்கப்படாமல், மாநாடு நடைபெற்றது சிறப்பான ஒரு விஷயம். மொத்தத்தில், சிறப்புமிக்க மாநாடாக, பத்தாவது மாநாடு அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
தோழன் ஹரி