Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, March 9, 2025

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின், இரண்டாவது கட்டப் போராட்டமும் வெற்றி!

 


தொழிற்சங்க உரிமைக்கான போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டு தொடரும்


சாம்சங் இந்தியாவின் அடாவடிக்கு எதிரான 2-ஆம் கட்டப் போராட்டமும் வெற்றிபெற்றுள்ள நிலையில், தொழிலாளர்கள் மற்றும்  தொழிற்சங்க உரிமை தொடர்பான ஏனைய கோரிக்கைகள் மீதான போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டு தொடரும் என்று சிஐடியு தெரிவித் துள்ளது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சிறப்புத் தலைவர் அ. சவுந்தரராசன், தலைவர் இ.முத்துக்குமார் ஆகியோர் இதுதொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

முத்தரப்பு உடன்பாட்டை ஏற்காத ஆலை நிர்வாகம்

சாம்சங் இந்தியா ஆலையில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட பிறகு, நிர்வாகமானது தொழிற்சங் கத்தை ஏற்க மறுத்தது. சங்கம் சேரும் உரிமை, கூட்டுபேர உரிமை  ஆகியவற்றை ஏற்க மறுத்தது மட்டு மின்றி, இந்திய தொழிற்சங்க சட்டங்  களையும் ஏற்க மறுத்து அவமதிக்கும் வேலையில் சாம்சங் ஈடுபட்டது. முதற்கட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு ஏற்பட்ட முத்தரப்பு உடன்பாட்டையும், சாம்சங் நிர்வாகம் தொடர்ந்து மீறி வந்தது. தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கை நிர்வாகம் உருவாக்கியுள்ள சிறுபான்மை ஆதரவு குழுவில் சேருமாறு சங்க நிர்வாகிகளை கட்டா யப்படுத்தியது. 39 நிர்வாகிகளுக்கு எதிராகப் பொய் வழக்குகள் பதிவு  செய்யப்பட்டன. ஜனவரி 31 அன்று  மேலாளரை சந்திக்க முயன்ற தொழி லாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மூன்று சங்க நிர்வாகிகள் விசாரணையின்றி பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். 

வெளியாட்கள் மூலம் சட்டவிரோத உற்பத்தி

இதை எதிர்த்து தொழிலாளர்கள், 05.02.2025 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வா கம், 1600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த  தொழிலாளர்கள் மூலம் சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டது. தொழிற்சாலை இயக்குநர் அலுவலகத்திற்கு மூன்று முறை ஆதாரத்துடன் புகார் அளித்தும், தொழிலாளர்  துறையும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டிய அரசு  மற்றும் தொழிலாளர் துறை, சாம்சங்  நிறுவனத்தின் முன் முற்றிலும் அலட்சியமான போக்கைக் கடைப்பிடித்தது. 16.03.2025 அன்று தொழிலாளர்கள் தங்களுக்குரிய உற்பத்தி பகுதியில் அமர்ந்து வெளியாட்களை வெளியேற்றினர். இதனை காரணம் காட்டி மேலும் 20 சங்க நிர்வாகிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட னர். ஆலையில் இல்லாதவர்களும் விடுப்பில் இருந்தவர்களும் கூட இந்த பணியிடை நீக்கத்தில் சேர்க்கப்பட்டனர். 

ஆலையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் போராட்டம் 

காவல்துறை மூலம் சாம்சங்  நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டதால், சாம்சங் ஆலை யிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில், காஞ்சிபுரத்தில், போராட்டம் தொடர்ந்தது. 11 பேச்சுவார்த்தைகளிலும் அரசின் அனைத்து சமாதான ஆலோசனைகளையும், தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் சாம் சங் நிர்வாகம் முரண்டு பிடித்ததுடன், தொழிற்சங்கத்தை இல்லாமல்  ஆக்கும் தந்திரங்களை மேற் கொண்டது.

தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் போராட்டத்திலிருந்து வெளியே வந்தால் அவர்கள் மீதான நடவடிக்கையை பரிசீலிப்பதாக நிர்வாகம் உறுதியளித்தது. தொழிலாளர்கள் இதை ஏற்ற பின்னும், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை ஆலையிலிருந்து வெளியேற்றி, வெளியாட்களை வைத்து நேரடி உற்பத்தியைத் தீவிரப்படுத்தியது. பேச்சுவார்த்தையின் போது 23 சங்க நிர்வாகிகளை பணியில்  எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்து, பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றியது. பணிக்கு வர சம்மதித்த தொழிலாளர்களுக்கு எல்லா போராட்டங்களும் சட்டவிரோதம்  என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடி தம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இது, இந்திய தொழில் தகராறு சட்டங்களுக்கே புறம்பான மோசமான நிபந்தனையாகும்.

விலகிக் கொண்ட  தொழிலாளர் துறை 

தொழிலாளர் துறை முன்பு, 06.03.2025 அன்று நடைபெற்ற கடைசிக் கட்ட பேச்சுவார்த்தையிலும், சாம்சங் நிர்வாகம் தனது சட்டவிரோத பிடிவாதத்தில் உறுதியாக இருந்ததால், பேச்சு வார்த்தையிலிருந்து தொழிலாளர் துறை விலகிக் கொண்டது. தொழிற் சங்கமும் நிர்வாகமும் உங்களுக்கு உள்ளாகவே பிரச்சனையை தீர்த்துக்  கொள்ளுங்கள் என்று கை விரித்தது.  சட்டவிரோத செயல்களை கண்காணிக்கவும் தடுக்கவும் வேண்டிய மாநில அரசு தனது கடமையில் இருந்து  முற்றிலும் தப்பித்தது.

தொழிலாளர் உறுதியால் இறங்கி வந்த சாம்சங்

07.03.2025 அன்று 900-க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் ஆலையின் முன்பாக குவிந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸ் படை குவிக்கப்பட்டது. போராட்டக் குழு காவல்துறை தலையீட்டை எதிர்த்தது. இந்த போராட்டத்தின் நிர்ப்பந்தத்தால், சாம்சங் நிர்வாகம் நிபந்தனை இல்லாமல் தொழிலாளர்கள் பணிக்கு  வருவதற்கான கடிதத்தை எழுத்துப் பூர்வமாக வழங்கியது. தொழிலாளர் சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய  அரசாலும் தொழிலாளர் துறையாலும் முடியாத காரியத்தை, உறுதிமிக்க  போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் சாதித்தனர். குறைந்தபட்சம் சட்டவிரோத மன்னிப்புக் கடிதத்தைக் கூட தடுத்து நிறுத்த முடியாத நிலையில், மாநில அரசும் தொழிலாளர் துறையும் பலவீனமாக இருந்தது. 07.03.2025 தேதியுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடரும் கோரிக்கைகள்

* 23 தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

* சிஐடியு தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் ஊதிய உயர்வு மற்றும் பொதுக் கோரிக்கைகள் குறித்து உடன்பாடு காண வேண்டும்.

* போட்டி அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

* சட்டத்திற்கு விரோதமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது.

* தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சிஐடியு கொடுத்துள்ள குற்றவியல் தண்டனை கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளின் மீது சுமூகத்தீர்வு ஏற்பட சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வகையிலும் தனது போராட்டத்தை சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடரும்.

பன்னாட்டு நிறுவனங்களின் இந்த அடாவடித்தனம் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் எழுந்திருக்கும் பெரும் சவாலாகும். அரசை மீறி செயல்படுவேன் என்கிற ஆணவத்துடன் ஒரு வெளிநாட்டு நிறுவனம் செயல்படுவது, தமிழகத்தில் உருவாகி இருக்கும் கவலைக்குரிய புதிய சூழலாகும். 

இந்த நடவடிக்கை தொழிற்சங்க உரிமைகள் மீதும், இந்திய நாட்டின் தொழிற்சங்க சட்டங்கள் மீதும் அந்நிய நிறுவனங்கள் எந்த அளவிற்கு தாக்குதலை நடத்த முடியும் என்பதை சாம்சங் நிர்வாகம் தன் செயலில் காட்டி வருகிறது.