புதுடெல்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கில், 20.05.2025 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்த, ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களுடன், பகுதி வாரி தொழிற்சங்கங்களும் இணைந்து, புதுடெல்லியில், தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கத்தை உற்சாகமாக, இன்று (18.03.2025) நடத்தின. ப்யாரி லால் பவனில், காலை 11 மணிக்கு துவங்கிய இந்த கருத்தரங்கத்தை, 10 மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் இணைந்து, தலைமையேற்று நடத்தினர். தொலைத் தொடர்பு பகுதியில் இருந்து BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களும் பங்கேற்றன.
இந்த கருத்தரங்கத்தில் உரையாற்றிய, 10 மத்திய தொழிற்சங்கங்களின் பொதுச்செயலாளர்களும், தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் தொகுப்புகளை விளக்கி பேசினர். மோடி அரசாங்கம் அமலாக்கி வரும் கார்ப்பரேட் ஆதரவு, நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்தனர். ஒவ்வொரு பேச்சாளர்களும், இந்த நாட்டின் செல்வங்களை, கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க, அரசாங்கம் எவ்வாறு அனுமதிக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும், தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை, மோடி அரசாங்கம் பறிப்பதை கடுமையாக கண்டித்தனர்.
இந்த கருத்தரங்கத்தில், ஒரு நான்கு பக்க பிரகடனம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு, நான்கு தொழிலாளர் தொகுப்புகளையும், உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என, அந்தப் பிரகடனம் ஏகமனதாக கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை/ தனியார் மயம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச கூலியாக 26,000 ரூபாய் வழங்க வேண்டும், இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அந்தப் பிரகடனம் முன் வைத்துள்ளது.
கோரிக்கை சாசனத்தில் உள்ளவற்றிற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கோரி, 20.05.2025 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்த இந்த கருத்தரங்கம் ஏக மனதாக முடிவெடுத்தது.
தோழர் P.அபிமன்யு
பொதுச் செயலாளர்