Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 3, 2025

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, மீண்டும் ஒரு மிகப்பெரிய சலுகையை வழங்கியது, இந்திய அரசாங்கம்

 


வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, மீண்டும் ஒரு மிகப்பெரிய சலுகையை வழங்கியது, இந்திய அரசாங்கம்.  வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய 36,950 கோடி ரூபாய்களை வசூலிப்பதற்கு பதிலாக, அந்த நிறுவனத்திடம் இருந்து, இந்திய அரசாங்கம் பங்குகளை பெற்றுள்ளது.  இந்த 36,950 கோடி ரூபாய்களை, ஸ்பெக்ட்ரம் கட்டணமாக, வோடபோன் ஐடியா நிறுவனம், இந்திய அரசாங்கத்திற்கு தர வேண்டி இருந்தது. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு, வோடபோன் நிறுவனம், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 16,333 கோடி ரூபாய்களை செலுத்த இயலாததால், இந்திய அரசாங்கம், அவர்களிடம் இருந்து பங்குகளாக வாங்கிக் கொண்டது.  வோடபோன் ஐடியா நிறுவனம், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக இல்லாமல் இருந்த போதும், இந்திய அரசாங்கம், அதன் மீது அளவற்ற பாசத்தை காட்டுகிறது.

தற்போது, ஒட்டுமொத்தமாக இந்திய அரசாங்கம், வோடோபோன் ஐடியா நிறுவனத்தில் 53,283 கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளது.  இந்திய அரசாங்கம், வோடபோன் ஐடியா நிறுவனத்தின், 48.99% பங்குகளை வைத்துள்ளது.  உண்மையில், இந்திய அரசாங்கம் தான், வோடோபோன் ஐடியா நிறுவனத்தில் தற்போது மிகப்பெரிய பங்குதாரர்.  வோடபோன் ஐடியா நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரான VODOFONE UK விடம், 16.1 சதமான பங்குகள் தான் உள்ளது. எனினும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 48.99 சதவீத பங்குகளை வைத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு, அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.  வோடபோன் ஐடியா இயக்குனர் குழுவில், ஒரு இயக்குனர் கூட இந்திய அரசாங்கத்திடம் இல்லை என்பதுதான் இதன் சிறப்பு (?).  ஒட்டு மொத்த நிர்வாகமும், சிறுபான்மை பங்குதாரர்களிடமே உள்ளது. 

இப்படித்தான் மோடி அரசாங்கம், மக்களின் பணத்தை, கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வாரி வழங்குகிறது.

தோழர் P.அபிமன்யு
பொதுச் செயலாளர்